இலட்சியவாதிக்கு அழிவுண்டு! இலட்சியத்திற்கு அல்ல!!

Share

click here to skip this banner

Friday, 24 February, 2012

முஸ்லிம் இனப் படுகொலையை நியாயப்படுத்தும் மோடி!

குஜராத்தில் 2002-ம் ஆண்டில் மட்டுமே மதக்கலவரம் நடக்கவில்லை. குஜராத்துக்கு மதக்கலவரம் புதிதும் அல்ல. நான் பிறப்பதற்கு முன்பே, குஜராத்தில் பல முறை மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. கி.பி. 1714-ம் வருடத்தில் இருந்து வரலாற்றை புரட்டிப் பார்த்தால், குஜராத்தில் ஆயிரக்கணக்கான மதக்கலவரங்கள் நடந்திருப்பது பதிவாகி இருக்கும் என்று குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி சிறப்பு விசாரணக் குழுவிடம் கூறியுள்ளதாக எஸ்.ஐ.டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்து சில ஊடகங்களில் வெளியிட்டுள்ளன.

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி, குஜராத் மாநிலம் கோத்ராவில் கரசேவகர்கள் பயணித்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில் பலர் பலியாகினர்.

இதையடுத்து குஜராத்தில் முஸ்லிம்கள் கொடூரமாக . படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கொடூரமாக பலர் எரித்தும், சித்திரவதை செய்தும் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரம் தொடர்பாக மாநில உயர் போலீஸ் குழு, சி.பி.ஐ., உச்சநீதிமன்றம் நியமித்த குழு ஆகியவை விசாரித்தன. இதில், குல்பர்க் ஹவுசிங் சொசைட்டி படுகொலை உள்ளிட்ட 10 கலவர வழக்குகளை விசாரிக்க, கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணை குழுவை (எஸ்.ஐ.டி.) அமைத்தது. இந்தக்குழு முதல்வர் மோடியிடம் விசாரணை நடத்தியது.

நரேந்திரமோடி, 2010 மார்ச் 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு புலனாய்வுக்குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். அப்போது, எஸ்ஐடி அதிகாரி ஏ.கே.மல்கோத்ரா எழுப்பிய 71 கேள்விகளுக்கும், நரேந்திரமோடி பதில் அளித்தார்.

இந்த நிலையில் இம்மாதம் 14-ந்தேதி சிறப்பு புலனாய்வு குழு, விசாரணை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை, அவர் குற்றமற்றவர் என்று கூறப்பட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் இந்த அறிக்கையின் விவரங்கள், அதாவது மோடி அளித்த வாக்குமூலம் குறித்தத் தகவல்கள் கசிந்துள்ளன.

மோடி எஸ்.ஐ.டி விசாரணையின் போது கூறிருப்பதாவது:

குஜராத்தில் 2002-ம் ஆண்டில் மட்டுமே மதக்கலவரம் நடக்கவில்லை. குஜராத்துக்கு மதக்கலவரம் புதிதும் அல்ல. நான் பிறப்பதற்கு முன்பே, குஜராத்தில் பல முறை மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. கி.பி. 1714-ம் வருடத்தில் இருந்து வரலாற்றை புரட்டிப் பார்த்தால், குஜராத்தில் ஆயிரக்கணக்கான மதக்கலவரங்கள் நடந்திருப்பது பதிவாகி இருக்கும்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்த உடன், எனது இல்லத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னாள் துணை கமிஷனரான (புலனாய்வு) சஞ்சீவ்பட் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏனெனில் நடந்தது உயர்மட்டக்குழு கூட்டம் என்பதால், ஜூனியர் அதிகாரியான சஞ்சீவ்பட் அழைக்கப்படவில்லை என்று மோடி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை என்கவுண்டர்: மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்!

சென்னையில் ஐந்து வங்கிக் கொள்ளையர்கள் போலீஸ் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 2 வங்கிககளில் பல லட்சம் பணத்தைத் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்ததாக கூறப்படும் வினோத்குமார் உள்ளிட்ட ஐந்து பேர் இன்று அதிகாலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து என்கவுண்டர் மூலம் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மின்கட்டணம், பால் விலை உயர்வு, மின்சார தடை ஆகிய பிரச்சனைகளால் மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ள தமிழக அரசும் மக்களின் கவனத்தை திசை திருப்ப இந்த என்கவுண்டரை பயன்படுத்திக் கொண்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேசமயம், இந்த என்கவுண்டரை மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இது சட்டவிரோதமான கொலை என்பதில் சந்தேகமில்லை. நேற்றுதான் ஒரு குற்றவாளியின் போட்டோவை சென்னை போலீஸ் கமிஷனர் காட்டி வெளியிட்டார். ஆனால் பத்து மணிநேரத்திற்குள் அந்த நபரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

மேலும், போலீஸ் கமிஷனர் நேற்று காட்டிய நபரைத் தவிர மேலும் நான்கு பேரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர்கள் குற்றவாளிகள் என்பது எப்படி நிரூபிக்கப்பட்டது. அவர்கள் உண்மையிலேயே குற்றவாளிகள்தானா என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை, நிரூபிக்கவில்லை.

மேலும், சம்பந்தப்பட்ட ஐந்து பேரும் தங்கியிருந்த வீடு என்பது குறுகலான சந்தில்தான் அமைந்துள்ளது. போலீஸார் பெருமளவில் அந்த இடத்தை முற்றுகையிட்டிருந்தனர். எனவே ஐந்து பேரும் நிச்சயம் தப்பி ஓட வாய்ப்பில்லை. அப்படி இருக்கையில் ஏன் என்கவுண்டர் செய்ய வேண்டும். அவர்களை உயிரோடு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி சட்டப்படியாகத்தான் தண்டித்திருக்க வேண்டும் என்று இவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் போலீஸாரோ, மக்கள் பாதுகாப்புக்காகவும், தங்களது சுய பாதுகாப்புக்காகவுமே சுட நேரிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Thursday, 23 February, 2012

வங்கி கொள்ளையர்கள் 5 பேர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை


சென்னை மாநகரில் நடந்த வங்கிக் கொள்ளையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐந்து இளைஞர்கள் போலீஸாரின் என்கவுண்டரில் பலியானார்கள். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவன் உள்பட ஐந்துபேர் என்கவுண்டரில் பலியானார்கள். மோதலில் காயமடைந்த இரண்டு இன்ஸ்பெக்டர்கள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் முதன் முறையாக ஒரு போலீஸ் என்கவுண்டரில் அதிகமான நபர்கள் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில், கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடி பாங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் இம்மாதம் 20ம் தேதி கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில், 33 லட்சம் ரூபாய் பணம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் படத்தை வெளியிட்டு, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி பேட்டியளித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் வண்டிக்காரன் தெருவி்ல் உள்ள வீடு ஒன்றில் இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ‌நள்ளிரவில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். இதை அறித்த நபர்கள் தப்பியோட நினைத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இதில் 5 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.

இந்த என்கவுண்டர் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் நள்ளிரவில் நடந்த என்கவுன்டர் தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் என போலீசார் தெரிவித்தனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட வடமாநில கொள்ளையர்கள் நேற்று இரவு தாங்கள் குடியிருக்கும் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் உள்ள வீட்டின் உரிமையாளரிடம் வாடகை பாக்கியினை கொடுத்துவிட்டு வீட்டை காலி செய்யப்போவதாக கூறியுள்ளனர். அப்போது இரவோடு இரவாக தப்பிக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டின் உரிமையாளருக்கு இவர்கள் தான் ‌‌கொள்ளையர்கள் என தெரியாது ‌என போலீசார் கூறுகின்றனர். எனினும் அன்று இரவில் டி.வி.யில் கும்பல் தலைவனின் வீடியோ படம் வெளியானது . இத‌னை பார்த்த போது தான் அவர்கள் போலீசாரால் தேடப்படும் கொள்ளையர்கள் என்ற தகவல் தெரிந்தது. அதன் பின்னர் தான் போலீசாருக்கு கொள்ளையர்கள் தங்கியிருந்த விவரம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து என்கவுண்டர் ஆபரேசனில் போலீஸ் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

சென்னை வேளச்சேரியில் நடந்த என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் வினோத்குமார், வினாய்குமார், ஹரீஷ் பிரசாத் , சகி‌கரே , அபேகுமார் உள்ளிட்ட 5 பேர் ஆவர். இதில் சகிகரே என்பவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், மற்றவர்கள் பீகார் மாநிலத்தவர் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

சென்னையில் துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டில் கட்டுக்கட்டாக ரொக்கப் பணமும், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் ஏராளமான பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் கொள்ளையர்களுக்கு யாருடனேனும் தொடர்புள்ளதாக என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேர்பியா-இஸ்ரேல்: இரு இனவாதங்களும் இரட்டை நிலைப்பாடும்

கடந்த செப்டம்பரில் ஐ.நா. பொதுச் சபையில் முன்வைக்கப்பட்ட பலஸ்தீன் தனிநாட்டுக் கோரிக்கை அமைதியாக அமுங்கிவிட்டது. யூதர்கள் இஸ்ரேலில் வாழும் அறபு பலஸ்தீனர்களுக்கு எதிரான புத்தம் புதுச் சட்டங்களை நிறைவேற்றி வருவதோடு, மேற்குக்கரையில் புதிய குடியேற்றங்களையும் அமைத்து வருகின்றனர்.

இத்தனைக்கும் மத்தியில் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே இஸ்ரேல் பலஸ்தீன் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என ஒபாமா கூறி வருகின்றார். "சமாதானம் என்பது மக்கள் மத்தியிலான விட்டுக் கொடுப்பில் தங்கியுள்ளது. சூடானிலிருந்து நாம் பெறும் பாடம் இதுவே. பேச்சுவார்த்தை மூலமான தீர்வொன்றே சுதந்திர நாட்டிற்கு வழிகோலும்" என்பது சமீபத்திய ஒபாமாவின் அறிக்கை.

ஒபாமாவின் இக்கருத்து உணர்த்துவதென்ன? அப்பழுக்கற்ற சியோனிஸ விசுவாசத்தின் உச்சியில் இருந்தவாறு ஒபாமா விடுக்கும் இந்த அறிக்கை, இஸ்ரேலை நோக்கியே விடுக்கப்பட வேண்டும். சூடான் விட்டுக் கொடுத்தது. தென் சூடான் நாடு உருவானது. இஸ்ரேல் விட்டுக் கொடுத்தால் பலஸ்தீன் தேசம் உருவாகும்.

யதார்த்தத்தில் இவை இரண்டையும் ஒப்புநோக்கவே முடியாது. ஏனெனில், சூடான் இஸ்ரேல் போன்று அறேபியர்களின் நிலங்களை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட நாடல்ல. இஸ்ரேல் இங்கு செய்ய வேண்டியதும் விட்டுக்கொடுப்பல்ல. மாறாக, பலஸ்தீன மக்களின் நிலங்களின் ஒரு பகுதியை மீள அளிப்பது மாத்திரமே.

ஏனெனில், இஸ்ரேலின் உருவாக்கமே சர்வதேச சட்டங்களை மீறி நிகழ்ந்த நீதிக்கும் மனச்சாட்சிக்கும் விரோதமான வரலாற்றுத் துரோகம். இந்தத் துரோகத்தை பல தசாப்தமாக அங்கீகரித்து வரும் அமெரிக்காவின் அறிக்கையை இதற்கு மேலும் நம்ப வேண்டியதில்லை.

கொசோவோ சேர்பியாவிலிருந்து பிரிந்து தனிநாடாக மாறியதை வொஷிங்டன் விழுந்தடித்துக் கொண்டு வரவேற்றது. அவ்வாறாயின் பலஸ்தீன் சுதந்திர தேசத்தை அது ஏன் அங்கீகரிக்க மறுக்கின்றது. இஸ்ரேலின் சம்மதத்துடன்தான் பலஸ்தீன நாடு உருவாக்கப்படும் என்பது முடியாத காரியமொன்றை நிகழ்த்த வேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பானது. சேர்பியாவின் சம்மதத்துடன்தான் கொசோவோ உருவாகவில்லை. 2008 இல் கொசோவோ தன்னை சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்தபோது அமெரிக்கா அதை அங்கீகரித்தது.

1389 இல் சேர்பியாவை உஸ்மானியர்கள் தோற்கடித்தனர். பல நூற்றாண்டுகளாக போல்கன் பிராந்தியம் உஸ்மானியரின் இஸ்லாமிய ஆட்சியின் கீழிருந்தது. 1800 களில் இப்பிராந்தியத்தில் அல்பேனியர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட போல்கன் நாடுகளை ஒன்றிணைத்த யூகோஸ்லாவியாவின் கீழ் கொசோவோ,அல்பேனியா, மொன்டநீக்ரோ ஆகிய நாடுகள் இணைக்கப்பட்டு கம்யூனிஸ அரசு உதயமானது.

1989 இல் ஸ்லோபொடன் மிலோசொவிக் கொசோவோவை சேர்பியாவுடன் இணைத்து முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படு கொலைகளைக் கட்டவிழ்த்தான். இந்த ஆக்கிரமிப்பிலிருந்து கொசோவோ தன்னை விடுவித்துக் கொள்வதற்கு சேர்பியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஓர் அரசாங்கத்தைக் கொண்டு செல்வதற்கான நிறுவனங்களைப் பலப்படுத்தியதோடு தன்னை சுதந்திர நாடாகவும் பிரகடனப் படுத்தியது.

1948 இல் இஸ்ரேல் பிரகடனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நான்கு அறபு-இஸ்ரேல் யுத்தங்கள் நடந்தன. அதன் பின்னர் 1978 இலிருந்து இஸ்ரேல்-பலஸ்தீன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் எதிலுமே பலஸ்தீனர்களுக்குச் சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை புதிய புதிய குடியேற்றத் திட்டங்களை அங்கீகரிப்பதாகவும் இஸ்ரேலுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தைத் தவிர்ப்பதாகவுமே அவற்றின் நோக்கங்கள் இருந்தன. பலஸ்தீன் தலைவர்கள் மட்டுமன்றி, அறபுத் தலைவர்களும் இப்பேச்சுவார்த்தைகளில் ஏமாற்றப்பட்டனர்.

கடந்த ஆறு தசாப்த கால சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவும் அதன் ஏனைய மேற்கத்தேய நட்பு நாடுகளும் மத்தியஸ்தம் வகித்துள்ளன. ஆனால், அதனால் பலஸ்தீனர்களுக்கு எந்த நன்மையும் கிட்டவில்லை. சில அமெரிக்கத் தலைவர்கள் தாங்கள் அப்போது இஸ்ரேல் சார்பாக நடந்து கொண்டமை மிகப் பெரும் வரலாற்றுத் தவறு என்பதை இப்போது உணர்த்தி வருகின்றனர்.

இஸ்ரேலுக்கும் சேர்பியாவுக்கும் இடையில் கொள்கை அளவிலும் செயற்பாட்டளவிலும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. சேர்பியாவில் மிலோசொவிக் கையாண்டு வந்தது ஒரு இனவாதக் கொள்கை (Racism). ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பாக துருக்கிய உஸ்மானியர்கள் சேர்பியர்களை படுகொலை செய்ததாக அவர் குற்றம் சாட்டி வந்தார். அதற்கு பழிவாங்கும் தருணம் கிடைத்துள்ளதாக பெல்கிரேட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பகிரங்கமாகவே குறிப்பிட்டிருந்தார்.

சேர்பிய இனவாதம் போல்கனில் முஸ்லிம்களின் இருப்பை முற்றாகவே துடைத்தழிக்கும் அரசியல் பின்புலம் கொண்டது. கிழக்கு ஐரோப்பாவில் முஸ்லிம்கள் இல்லாத ஓர் இனத்தூய்மையை சேர்பிய இனவாதம் முன்னிறுத்தியது. எனவேதான் கொசோவோ, பொஸ்னியா,ஹெசகோவினா ஆகியவற்றுக்கு எதிரான சேர்பியப் படையினரின் தாக்குதல்கள் முஸ்லிம்களை முற்றாகவே துடைத்தழிக்கும் வகையில் நடந்தன. முஸ்லிம் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வல்லுறவுச் சம்பவங்கள் திட்டமிட்டே நடத்தப்பட்டன.

இஸ்ரேலை உருவாக்கிய சியோனிஸம், யூத தூய்மைவாதத்திலிருந்து மேலெழுகின்றது. அது யூதர்களே உலகில் மேன்மையான சமூகம் என்பதாகவும், அவர்களது மத, பண்பாட்டு, வரலாற்று ரீதியான எதிரிகள் முஸ்லிம்கள் என்பதாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. யூத இனவாதமே இஸ்ரேலின் அடிப்படை அரசியல் சித்தாந்தம். அமெரிக்கத் தலைவர்கள் மத்திய கிழக்கிலுள்ள ஒரேயொரு ஜனநாயக நாடு இஸ்ரேல் எனப் புகழ்ந்தாலும், இஸ்ரேலில் யதார்த்தத்தில் நிலவுவது ஓர் இராணுவ ஆட்சியே.

4.5 மில்லியன் இஸ்ரேலியர்கள் அனைவருமே குறைந்தது இரு ஆண்டுகளேனும் கட்டாய இராணுவ சேவையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலில் சிவில் சமூகம் என அடையாளப்படுத்தக் கூடிய எதுவுமே இல்லை. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஆயுத தாங்கிகளாகவே உள்ளனர். அறேபியர்கள் யூதர்களின் பரம எதிரிகளாகவும் கொன்றொழிக்கப்பட வேண்டியவர்களாகவும் பள்ளிக்கூட பாடப் புத்தகங்களில் வர்ணிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் சேர்பிய இனவாதத்தை விட இஸ்ரேலிய யூத இனவாதம் மிகவும் குரூரமானது. இப்படியிருக்கும் தறுவாயில், பலஸ்தீன் பிரச்சினைக்குத் தீர்வு இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதன் மூலமே சாத்தியம் என ஒபாமா கூறுவது அவரது அரசியல் உள்நோக்கத்தையே புலப்படுத்துகின்றது.

எல்லா ஆரம்பங்களுக்கும் நிச்சயம் ஒரு முடிவு உள்ளது. ஒபாமா மட்டுமன்றி இதுவரையான அமெரிக்கத் தலைவர்கள் இஸ்ரேல்-பலஸ்தீன் நெருக்கடியை முடிவில்லாத ஓர் ஆரம்பமாகவே பார்த்து வருகின்றனர். இதற்குக் காரணமுள்ளது. அமெரிக்காவின் ஆளும் வர்க்கமாக மாற எண்ணுகின்றவர்கள் இந்த விதியைத்தான் பின்பற்றியாக வேண்டும் என்ற நியதி உள்ளது. ஆனால், வரலாறு இதற்கு புறம்பான தீர்ப்பைத்தான் வழங்கும் என்பதை அவர்கள் ஏற்க வேண்டிய நாள் தூரத்தில் இல்லை.

Wednesday, 22 February, 2012

அத்னானின் உறுதிக்கு முன்னால் இஸ்ரேல் மண்டியிட்டது

ஃபலஸ்தீன் விடுதலை போராளி காதர் அத்னானின் சிறை உண்ணாவிரதம் 65 தினங்களை கடந்த வேளையில் இஸ்ரேலிய பயங்கரவாதத்தின் கோரமுகமும் மீண்டும் ஒரு முறை சர்வதேச சமூகத்தின் முன்னால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அரசு நிர்வாக ரீதியான சிறை(Administrativedetention) என்ற பெயரால் விசாரணையோ, குற்றச்சாட்டோ இன்றி இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான ஃபலஸ்தீன் மக்களுக்காக தனி மனிதனாக போராடி வருகிறார் அத்னான். மருத்துவமனையின் படுக்கையில் மிகவும் ஆபத்தான நிலையில் படுத்திருக்கும் அத்னான், உலகின் மிகப்பெரிய க்ரிமினல் அரசை மண்டியிடச் செய்வாரா? என்பதை உலகம் உற்றுநோக்கி வருகிறது.

இஸ்ரேல் என்ற ரவுடி தேசத்தின் அடக்குமுறைகளையும், அக்கிரமங்களையும் கடந்த 45 ஆண்டுகளாக ஃபலஸ்தீன் மக்கள் அனுபவித்து வருகின்றார்கள். வதை சிறைகளும், வன்முறையும் இஸ்ரேலிய சியோனிஸ்டுகளிடமிருந்து பிரிக்கமுடியாத அம்சம் என்பது உலகிற்கு தெரிந்த சேதி. சர்வதேச சட்டங்கள் எதுவும் தனக்கு பாதகமில்லை என்ற திமிரிலும், அமெரிக்காவின் அரவணைப்பிலும் ஆட்டம் போட்டுவரும் இஸ்ரேலுக்கு அத்னான் போன்ற ஃபலஸ்தீன போராளிகள்தாம் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்கள்.

யார் இந்த அத்னான்? – இஸ்லாமிக் ஜிஹாத் என்ற ஃபலஸ்தீன் விடுதலைப் போராட்ட அமைப்பின் உறுப்பினர் என்பதை தவிர வேறொன்றும் அவரைப் பற்றி வெளியுலகிற்கு தெரியாது. மேற்குகரையில் தனது வீட்டிலிருந்து கடந்த டிசம்பர்-17-ஆம் தேதி நள்ளிரவில் இஸ்ரேல் ராணுவம் அத்னானை கைது செய்தது. விசாரணை என்ற பெயரில் 18 தினங்கள் கொடூர சித்திரவதைகளுக்குப் பிறகு குற்றம் எதுவும் சுமத்தாமல் அரசு நிர்வாகரீதியான சிறை என்று கூறி அத்னானை சிறையில்அடைத்தது இஸ்ரேலிய சியோனிஷ அரசு.

முன்னூறுக்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனர்கள் இதே குற்றம் சுமத்தப்பட்டு தற்போது இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது குறித்து எவ்வித கேள்வியும் எழுப்புவதற்கு வாய்ப்பை வழங்காமல் இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் எவரையும் 6 மாதம் வரை சிறையில் தள்ளலாம். பின்னர் தேவைப்பட்டால் சிறைக்காவலை மீண்டும் ஆறுமாதத்திற்கு நீட்டிக்கலாம். இத்தகையதொரு கொடிய கறுப்புச் சட்டம் உலகில் இஸ்ரேலில் மட்டுமே அமுலில் உள்ளது.

கடந்த இரண்டு மாதங்களிடையே இரண்டு தடவை மட்டுமே அத்னான் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் அரை மணிநேரம் வீதம். பேசும் பொழுது அருகில் ஆயுதமேந்திய இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் வட்டமிடுவர். உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ள அத்னானை நான்கு வயதான மகளால் அடையாளம் காணமுடியவில்லை என்று அவரது மனைவி ராண்டா அத்னான் கூறுகிறார். தற்போது இரவு நேரங்களில் திடீரென விழித்து தந்தையை கேட்டு மகள் அழுவதாக ராண்டா தெரிவிக்கிறார். திருமணத்திற்கு முன்பு ஐந்து தடவையும், திருமணத்திற்கு பிறகு இரண்டு தடவையும் இஸ்ரேல் ராணுவம் அத்னானை கைது செய்துள்ளது. ஆனால், அத்னான் ஏதேனும் தாக்குதல்களில் தொடர்புடையவர் என்பதை நிரூபிக்க ஒரு முறை கூட இஸ்ரேலிய அதிகாரிகளால் இயலவில்லை.

அத்னானை குறித்து அவருடன் முன்பு அஸ்கெலடான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அபூ மரியா நினைவு கூறுகையில், ‘அத்னானுடன் இருந்த வேளையில் சிறை என்பது ஒரு பல்கலைக்கழகமாக இருந்தது. அத்னான் ஒரு பேராசிரியரைப் போல் இருந்தார்’ என்று குறிப்பிடுகிறார்.

மருத்துவர்கள் அத்னான் இன்னும் சில நாட்கள்தாம் உயிரோடு இருப்பார் என்று கூறுகிறார்கள். எந்தவொரு உண்ணாவிரதப் போராட்டமும் 70 நாட்களை தாண்டியதில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள் (இங்கே ஒரு சந்தேகம் எழும், இந்தியாவின் மணிப்பூரில் சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா 10 ஆண்டுகளுக்கு மேலாக உண்ணாவிரதம் இருக்கிறாரே? என்று. ஆனால் அவருக்கு அரசு கட்டாயப்படுத்தி திரவ உணவை மூக்கு வழியாக டியூப் மூலம் அளித்துவருகிறது. அத்னான் கடந்த 65 தினங்களாக ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்)

அத்னானின் தந்தை கிலாத் ஷாலித் என்ற இஸ்ரேலிய ராணுவ வீரனை குறித்து கவலையுடன் மேற்கோள்காட்டுகிறார். கிலாத், ஹமாஸினால் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அண்மையில் அவர் விடுதலையான பொழுது பூரண உடல்நலத்துடன் தனது குடும்பத்தாரை சந்தித்தார். அத்னானின் தந்தை கேட்கிறார். ‘எங்கே கிலாத் ஷாலிதின் பெற்றோர்கள்? இந்த மனிதநேயத்திற்குரிய வழக்கை குறித்து எனக்காக அவர்கள் வருந்துவார்களா? எங்கே சென்றார்கள் அவர்கள்?’ கேள்வி எழுப்பும் அவர் கிலாதுடன் தனது மகனின் கைதை ஒப்பிட்டு இவ்வாறு கூறினார்: ‘எனது மகன் வீட்டில் வைத்து மனைவி, பிள்ளைகளுக்கு முன்னால் வைத்து கைது செய்யப்பட்டான். அவனிடம் எவ்வித ஆயுதமும் இல்லை. ஆனால், கிலாத் ஆயுதமேந்திய ராணுவவீரனாக இருந்தார். ஷாலித் காஸ்ஸா மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, அவர்களுடைய வீடுகளை இடித்தவர். ஆனால் ஷாலித் விடுதலையா கி உள்ளார்.’ என்று தனது ஆதங்கத்தைவெளியிடுகிறார் அவர்.

கிலாத் ஷாலிதின் விடுதலைக்காக தொடர்ந்து கோரிக்கை விடுத்த ஐ.நா சபை பொதுச் செயலாளர் எங்கு ஓடி ஒழிந்தார் என்று தெரியவில்லை. ஜனநாயகத்தையும், மனிதநேயத்தையும் குறித்து அடிக்கடி கவலைப்படும் மேற்கத்திய நாடுகள் வாய் மூடிஇருக்கின்றன. இஸ்ரேலின் பயங்கரவாதத்தை குறித்து இவர்கள் எப்பொழுதுதான் கவலைப்பட்டார்கள்? சர்வதேச சமூகத்தின் தீராத மெளனம்தான் பயங்கரவாதத்தை தொடர்ந்து அரங்கேற்ற இஸ்ரேலுக்கு துணிச்சலை கொடுத்துள்ளது.

“நான் பட்டினி கிடப்பது நீங்கள் இந்த பூமியில் வாழ்வதற்காகும். நான் மரணிப்பது உங்களின் வாழ்க்கைக்காக. ஆதலால் புரட்சியின் பாதையில் துணிச்சலுடன் உறுதியாக நில்லுங்கள். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அதன் மிகவும் பயங்கரமான குணத்தை தான் தற்போது உபயோகித்து வருகிறது. குறிப்பாக சிறைக் கைதிகளிடம். நான் அவமதிக்கப்பட்டேன். கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளானேன். எதற்கும் எவ்வித காரணமுமில்லை. நூற்றுக்கணக்கான ஃபலஸ்தீனர்களை சிறையில் அடைத்து சித்திரவதைச் செய்ய இஸ்ரேல் உபயோகிக்கும்அரசு நிர்வாக ரீதியானகைது என்ற அபத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும்வரை எனது போராட்டம் தொடரும் என்றுநான் அல்லாஹ்விடம் உறுதியளித்துள்ளேன்.”-வழக்கறிஞர் மூலமாகஃபலஸ்தீன் மக்களுக்கு அளித்த செய்தியில் அத்னான் கூறியுள்ளார்.

அத்னான் போன்ற லட்சியவாதிகளின் உறுதிக்கு முன்னால் ஆதிக்க சக்திகள் எப்பொழுதும் தோல்வியைத்தான் தழுவார்கள். அவர்கள்தொடர்ந்து தங்களதுஅட்டூழியங்களை அரங்கேற்ற முடியாது. இதுதான் வரலாறு நமக்கு தரும் பாடமாகும். அத்னானின் உண்ணாவிரதப் போராட்டம் ஃபலஸ்தீன் போராட்டத்தை அணையா விளக்காக ஜொலிக்கச் செய்யட்டும்! அவருடைய வாழ்நாளை இறைவன் நீட்டிக்க செய்யட்டும்!

அரசு நிர்வாக சிறை (administrative detention) என்ற கருப்புச் சட்டத்தின் அடிப்படையில் விசாரணை இல்லாமல் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட ஃபலஸ்தீன் விடுதலை போராளி காதர் அத்னான் தனது 66 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

அத்னான் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டால் வருகிற ஏப்ரல் 17-ஆம் தேதி குற்றம் சுமத்தாமல் அவரை விடுதலைச் செய்வதாக இஸ்ரேலிய நீதி அமைச்சகம் உறுதியளித்தது. இதனை அத்னானின் வழக்கறிஞர்கள் அவரிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.